Thursday, August 25, 2011

அபராதம் - இது ரொம்ப ஓவர்!

என் கல்லூரிக் காலம் - 1993. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு மெல்ல துளிர்விட்ட காலம். டிஜிட்டல் லாஜிக் கேட்ஸ்-தான் எங்களுக்குப் பிரதான பாடம். அண்ட், ஆர், நாட் - லாஜிக் கேட்ஸ்-ஐ புரிந்து கொள்ளவே எங்களுக்குப் பல வகுப்புகள் தேவைப்பட்டது. யாரேனும் எக்ஸார், எக்ஸ்னார் என்று அடுத்த கேட்ஸ்-களைப் பற்றிப் பேசினால் அவன் பில் கேட்ஸ்-ஐ விட பெரிய பிஸ்தா!

இரண்டு ராணி காமிக்ஸ் அளவு இருந்த லாஜிக் கேட்ஸ் புத்தகத்தைப் படிக்கவே சக மாணவர்கள் திணறும் போது, கல்லூரி லைப்ரரி-யிலிருந்து 'டிஜிட்டல் டேட்டா கம்யூனிகேஷன்ஸ்' என்று ஒரு நானூறு பக்க புத்தகத்தை நான் எடுத்துவர, நண்பர்களின் காது சிக்கு புக்கு ரயில் பிரபுதேவா கணக்காகப் புகைந்தது.

ஆஹா, இந்தப் புத்தகத்தை வைத்து கொஞ்சம் பந்தா பண்ணலாம் என நினைத்தேன். தினமும் கல்லூரியினுள் நுழையும் போது,  பளபள அட்டையைக் கொண்ட இப்புத்தகத்தை தகத்தகாய கதிரவனின் கதிர்கள் பட்டுத் தெறிக்கும்படி கையிலேயே பிடித்துக் கொண்டு, அன்று புரிந்தோ புரியாமலோ மனனம் செய்த ஓரிரு வாக்கியங்களை வைத்து இல்லாத பொல்லாத வியாக்கியானங்களை அளந்து பொளந்து கட்டி எல்லாருடைய மண்டையையும் காய வைத்தேன்.

“எச்செயலைச் செய்தாலும் முழுமையாக செவ்வனே செய்” என்று ஆன்றோர்கள் சொல்லிக் கொடுத்தார்கள் இல்லையா! அதன்படி லைப்ரரி புத்தகத்தை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட பத்து நாளும் பந்தாவைத் தொடர கங்கணம் கட்டிக் கொண்டேன். துரதிஷ்டவசமாக பத்தாம் நாள் ஜூரம் அடிக்க லீவு எடுக்க வேண்டியதாகி விட்டது.

அடுத்த நாள் அபராதம் கட்ட வேண்டியிருக்கும் என நினைத்தே லைப்ரரிக்குச் சென்றேன். உடல் நலமில்லாததால் நேற்று திருப்பித் தர முடியவில்லை என நூலகரிடம் விளக்க, அவர் சரியென புத்தத்தை வாங்கிக் கொண்டார். “ஃபைன் சார்?” என்றேன். “பாத்துக்கலாம்” என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டார். அடடா, எவ்வளவு நல்ல மனிதர் இவர்! உடல் நலமில்லை என்று சொன்னால் எவ்வளவு கரிசனத்துடன் நடத்துகிறார் என மெய் சிலிர்த்தேன்.

பாடங்கள் சூடுபிடிக்க, தேர்வுகள் நெருங்கிவர மீண்டும் லைப்ரரியிலிருந்து புத்தகம் எடுப்பதே மறந்து போனது.  ஆண்டு தேர்வு மணியடிக்க, ஹால்-டிக்கெட் வாங்க முனைந்த போதுதான் நோ-ட்யூ சர்டிஃபிகேட்-இல் நூலகரானவர் ஒரு நாள் தாமதத்திற்கான அபராதத்தை நிரப்பியிருந்தது தெரிந்தது.

அபராதத்தை கல்லூரி வளாகத்தினுள் இயங்கும் ஒரு வங்கியின் கிளையில்தான் செலுத்த வேண்டும். வகுப்பை கட் அடித்ததற்கு ஃபைன், தேர்வில் முழுக்கு போட்டதற்கு ஃபைன், லேப்-இல் எதையாவது உடைத்ததற்கு ஃபைன் என பல காரணிகளால் க்யூ நீண்டிருந்தது.

நான் ஃபைன் கட்ட நிற்பதும், செய்த முன்வினையும் (பந்தா) கல்லூரி முழுக்க பரவி விட்டது. (சில காரணங்களால் நான் பிரபலம். ஆனால் காரணத்தை இங்கே சொல்ல மாட்டேன்!). கூட்டம் கூடி விட்டது. நான் கவுண்டரை நெருங்கும் போது தரதரவென என்னை இழுத்து வந்து, மீண்டும் க்யூவின் கடைசியில் நிற்க வைத்தார்கள். ஒரு முறையல்ல, இரு முறையல்ல... எட்டு முறை!

மதிய இடைவேளை குறுக்கிட, கவுண்டர் மூடப்பட்டது. அவசர அவசரமாய் உணவை முடித்து, முதல் ஆளாக வந்து கவுண்டரை கெட்டியாகக் கட்டிக் கொண்டேன். பின் வந்தவர்கள் என் இரு கால்களையும் தூக்கி தேர் வடம் போல இழுத்தார்கள். இன்னும் சில நொடிகள் கடந்தால் கவுண்டர் பெயர்ந்துவிடும். நல்லவேளை. மதிய ஷிஃப்டிற்கான கேஷியர் அம்மணி அங்கு வர அந்த இடமே கப்சிப்.

நகருக்கு வெளியே இயங்கும் இந்த ஆண்கள் கல்லூரியில் அவர் மட்டுமே பூச்சூடுபவர். வகுப்பறையில் அலப்பறை செய்யும் மாணவர்கள் எல்லாம் கவுண்டரின் முன் நல்லொழுக்கம் பேணுவர். அதுவரை வாரப்படாத கேசங்கள் எல்லாம் சீப்போடு குலவிக் கொள்ளும். இஸ்திரி பெட்டியின் கதகதப்பை உணராத சட்டைகள் எல்லாம் எப்படியோ நேர் செய்யப்படும். அந்த அம்மணியின் புண்ணியத்தில் என் கால்கள் தரையிறங்கின.

பெருமூச்சு விட்டு சலானையும், தொகையையும் நீட்ட, பூவிழியாள் தீவிழியாள் ஆனார். நான் வெட்கித் தலை குனிந்தேன். அருகில் இருந்தவர்கள் குபீரென எழுந்த சிரிப்பை அடக்க முயன்றனர். ‘டொம்’ என்று குத்தப்பட்ட ரிசீவ்ட் சீல்-இன் சப்தத்தில் அம்மணியின் கோபம் தெறித்தது. தள்ளி நின்றவர்கள் வாய்விட்டு அலறி கண்ணீர் மல்கிச் சிரித்தனர்.

ஏனென்று கேட்கிறீர்களா?

இப்படி சலானை எல்லாம் நிரப்பி, கஜினி முகமது போல் படையெடுத்துப் போராடி, தீவிழி தாங்கி நான் கட்டிய ஒரு நாள் அபராதத் தொகை:

இருபத்தி ஐந்து பைசா!!!

4 comments:

  1. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை..

    நேற்று நடந்தது போல சொன்ன விதம் அருமை!!

    ReplyDelete
  2. ரொம்ப ரசித்துப் படித்தேன். பாராட்டுகள் :)

    - என். சொக்கன்,
    பெங்களூரு.

    ReplyDelete

உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...