Monday, August 29, 2011

ஹிப் ஹிப் ஹூர்ர்ர்ரே... ஹஸாரே


தோனி சிக்ஸர் அடித்து, இந்தியா உலகக் கோப்பையை வென்ற போது ஏற்பட்ட ஆரவார சந்தோஷத்தை விட அதிகமாக இருக்கிறது இப்போதைய ஒட்டு மொத்த தேசத்தின் ஆனந்தமான உற்சாகம்.

இதன் கேப்டன், ஆல் ரவுண்டர், மேன் ஆப் தி மேட்ச், மேன் ஆப் தி சீரியஸ்... எல்லாம் அன்னா ஹசாரே.

இவர் தோனியைப் போல சிக்ஸர்களை விளாசாமல், அமைதியாக, தீட்சண்யமாக தடுப்பாட்டம்தான் ஆடினார். இவர் மீது குற்றச்சாட்டுகள், நடவடிக்கைகள்... இன்னும் என்னன்னவோ பெளன்சர்களாக, யார்க்கர்களாக வீசப்பட்டன. ஆனால் பெயர்ந்ததென்னவோ எதிரணியின் விக்கெட்டுக்களே!

மிக அபூர்வமாக ஒட்டு மொத்த தேசத்தின் கவனமும் பார்லிமெண்டின் மீது குவிந்திருக்கிறது என்று அங்கே நிதியமைச்சரின் குரல் ஒலித்தது. இதற்கு அடிப்படை மக்களின் இயக்கம், தர்க்கங்களைக் கண்டு பொதுவாக ஒதுங்கும் நடுத்தர வர்க்கங்களின் எழுச்சி, அதை தலைமையேற்று நடத்திய மாமனிதர் ஹசாரே.

இதுவரை பார்லிமெண்டில் அமளி துமளிகளை, சட்டை பேப்பர் கிழிப்புகளை, வெளி நடப்புகளை மட்டும் செய்திச் சானலில் பார்த்திருந்த சாமான்ய இந்தியன், வரலாறு காணாத வகையில் ஒரு தீர்க்கமான விவாதம், ஒரு முழு நாளுக்குத் தொடர்ந்து நடைபெறுவதை, நேரடி ஒளிபரப்பில் பெருமை பொங்கப் பார்த்தான்.

எழுத்துக்களை விட, சொற்களை விட, மெளனமும் முறுவலும் கூட வலிமையானவை என ஹசாரே பறைசாற்றினார்.

மைதான மேடையில், சோர்வை வெளிக்காட்டாமல், தலையணைமேல் அதை விட மிருதுவாகப் படுத்திருந்து அவர் போராடிய காட்சியே, மொழிகளைக் கடந்து, மாநிலங்களை இணைத்து, இந்தியனை அவர் பின் அணிவகுக்க உசுப்பியது.

இதனால் அவரின் பிரதான கோரிக்கைகளுக்கு பாராளுமன்றம் முதற்படி ஒப்புதலை அளித்திருக்கிறது. மக்களின் விருப்பமே, பாராளுமன்றத்தின் விருப்பம் என பிரதமர் வழி மொழிந்திருக்கிறார். ஊழலற்ற பாரதத்திற்கான நம்பிக்கை கீற்றொளி, கடைகோடி இந்தியனுக்கு இப்போது தென்படுகிறது.

பலவித விமரிசனங்கள் ஹசாரே மீது இறைக்கப்பட்டன. ஆனால் எதற்கும் அசையாமல், எந்தவொரு அரசியல் அதிகார பலமும் இன்றி, வயோதிகத்தின் தளர்ச்சிகளையே முடிச்சுகளாக்கி, வைராக்கியத்துடன் அவர் நடத்திய போராட்டம் ஒவ்வொரு இந்தியனுக்கும் நடத்தப்பட்ட பாடம்.

பூனைக்கு மணி கட்டிய ஹசாரே, தோனி சிக்ஸர் அடித்த போது காட்டிய நிதானத்தைவிட, பல மடங்கு நிதானத்தைக் கடைபிடித்து, “இப்போது உண்ணா விரத்தை முடித்துக் கொள்ளவா?” என மக்களிடம் பண்பட்ட விதத்தில் கேட்டு ஒவ்வொருவருக்காகவும் நன்றி தெரிவிக்கிறார்.

ஆனால், நாம்தான் கோடிகளில் நன்றி தெரிவிக்க வேண்டும், இந்த மகாத்மாவிற்கு.

1 comment:

உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...